Home

Friday, December 2, 2011

Information Literacy and School Libraries


தகவல் தொழிநுட்ப யுகமொன்றில் 
பாடசாலை நூலகங்களும் தகவல் அறிதிறனும்
       


அறிமுகம்
தகவல் வெளிப்பாட்டு வடிவங்களான உரு வடிவம், எண்ணும் எழுத்தும் சேர்ந்த வரி வடிவம், கோடுகள் இணையும் வரைபு வடிவம், கண்ணுக்குப் புலப்படாத அலை வடிவத் தகவல்களின் ஈட்டல், செய்முறை, சேமிப்பு, பரிமாற்றம், பரவலாக்கம் போன்ற அனைத்து செய்முறைகளுக்கும் தனித்தோ அல்லது இணைந்த வகையிலோ பிரயோகிக்கப்படும் கைவினைத் தொழிநுட்பம், அச்சுத் தொழிநுட்பம், கட்புல செவிப்புலத் தொழினுட்பம்,  பிரதியாக்கத் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கணினித் தொழினுட்பம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த சேர்க்கையில் இன்றைய உலகு இயங்குகின்றது. கையடக்கத் தொலைபேசிக்கு ஒருநாள் ஓய்வு கொடுப்பது கூட சாத்தியமற்றது என்றளவிற்கு  நாளாந்த வாழ்வு தொழிநுட்ப உலகுடன் இறுகப் பிணைந்து போயிருக்கிறது. இணையம் இன்றி இயக்கம் இல்லை என்பதையும் முகநூலே (Facebook)  முதன்மை நூல் என்பதற்கும் அறிமுக உரைகளும் அணிந்துரைகளும் தேவைப்படாத அளவிற்கு அதன் இன்றியமையாமை அனைத்து மனங்களாலும் உணரப்படுகின்றது. சர்வதேச தொலைத்தொடர்பு நாள், நூல் நாள் போன்று தொழிநுட்பமற்ற நாள் (No Technology dayஎன்ற ஒன்றை சர்வதேச ரீதியில் கொண்டாடவேண்டிய தேவையை மனித சமூகம் உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்னுமளவிற்கு தகவல் தொழிநுட்ப உலகின் ஆக்கிரமிப்பால் மனித சமூகம் திணறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் தான் தகவல் அறிதிறன் என்னும் பதமும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.

ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் தேவையை முன்னிட்டு ஒரு மொழியின் அடிப்படையை மட்டும் கற்றுக் கொள்வதன் மூலம்  வாசிப்பதற்கும்  எழுதுவதற்குமான ஆற்றல் என்று பொருள் கொள்ளப்பட்ட எழுத்தறிவு அல்லது அறிதிறன் (literacyஎன்ற தனிப்பதமானது பொருட்துறைகளை நன்கு விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல், தகவலை நன்கு விளங்கிக்கொள்வதற்கும் தொழிநுட்பக் கருவிகளை நன்கு கையாள்வதற்குமான ஆற்றல் என்ற விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்ட தகவல் அறிதிறன் (Information literacyஎன்ற கூட்டுப்பதமாக அண்மைக்காலங்களில்; வளர்ச்சியடைந்திருக்கிறது. தகவல் அறிதிறன், தொழிநுட்ப அறிதிறன், கணித அறிதிறன் போன்ற பதங்கள் தற்கால தகவல் பதிவேடுகளில் கணிசமாகப் பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி நாளாந்த வாழ்விலும் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன.


தகவல் அறிதிறன்
தேவையான தகவலைக் கண்டறிதல், மீளப் பெறல், பகுப்பாய்வு செய்தல், பயன்படுத்தல் முதலிய திறன்களின் தொகுதி தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது. 1970களின் ஆரம்பகால தோற்றப்பாடுகளில் ஒன்றான தகவல் அறிதிறன் என்ற கருத்துநிலையானது இன்றைய ஒவ்வொரு மனிதனதும் இன்றியமையாத தேவையாக, உலக அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் அளவுகோலாக, சுயகற்றலுக்கான ஆளுமைவிருத்தியின் தூண்டியாகக் கருதப்படுகிறது. தகவல் அறிதிறனின்றி  வாழ்க்கை முழுவதற்குமான கல்வி என்ற கருத்துநிலை பொருளற்றது என்பதைக் கல்விச் சமூகம் உணரத் தொடங்கியிருக்கிறது. தகவற் சுமைக்கான தீர்வாகவும்;, தகவற் பதுக்கலுக்கான தீர்வாகவும், தகவலுக்கான நுழைவாயிலாகவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஒன்றாகவும், வேகமாகவும் சரியாகவும் முடிவெடுப்பதற்கான தூண்டலைத் தருவதற்கான அடிப்படையாகவும் இதன் முக்கியத்துவம் மாறியிருக்கிறது. தகவற் தேவை, அதன் கிடைக்கும் தன்மை, தகவலைத் தேடும் வழிமுறைகள், கிடைக்கும் தகவலை மதிப்பிடவேண்டிய தேவை, கிடைத்த தகவலின் நுட்பமான கையாளுகை, தகவலைப் பயன்படுத்துவது தொடர்பான ஒழுக்க நியமங்கள், தகவலைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் சரியான வழிகள், கிடைத்த தகவல்களை எவ்வாறு முகாமைசெய்வது என்பன தகவல் அறிவில் உள்ளடங்குகின்றன. தகவல் தொழினுட்பம், தகவல் வளங்கள், தகவல் செய்முறை, தகவல் முகாமைத்துவம், அறிவு உருவாக்கம், அறிவுப் பரம்பல், பேரறிவு என்பன தகவல் அறிதிறனின் ஏழு படிநிலைகளாகக் கொள்ளப்படுகின்றன.

வரைவிலக்கணம்
தகவல் அறிதிறன் என்ற பதம் தொடர்பாக பலதரப்பட்ட கருத்துநிலைகளும் வரைவிலக்கணங்களும் நிலவுகின்றன. ஒரு சமூகத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் தான் வாழும் சமூகத்தில்; புத்திபூர்வ முறையிலும் வினைத்திறன்மிக்க வகையிலும் பங்குகொள்வதற்குத் தேவையான திறன்கள் அனைத்தும் தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிக்கப்படுகிறது. அமெரிக்க நூலக சங்கத்தின் கருத்துப்படி தகவல் தேவைப்படும் காலத்தை இனங்காணுவதற்கும், தேவைப்படும் தகவல் உள்ள இடத்தைக் கண்டறிவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்கும் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய ஆற்றல் தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிக்கப்படுகிறது. [ALA 1989].  
கணினிகளைப் பயன்படுத்தும் அறிவும் தகவலின் தன்மைகளை இனங்கண்டு அதன் தொழிநுட்ப கட்டுமானம் அதன் சமூக கலாசார, தத்துவ விளைவுகள் என்பவற்றுக்கூடாக அதனை அணுகுவதற்கான அறிவு தான் தகவல் அறிதிறன் என இன்னொரு வரைவிலக்கணமும் உண்டு. [Hughes 1996]


வரலாறு
தகவல் அறிதிறன் என்ற சொற்றொடரானது 1974ம் ஆண்டு நூலகங்கள் மற்றும் தகவல் அறிவியலுக்கான தேசிய ஆணைக்குழுவின் சார்பாக போல் ஜி.சேர்கோவ்ஸ்கி என்பவரால் எழுதப்பட்ட அறிக்கையில் முதன்முதல் அச்சு வடிவில் உள்ளடக்கப்பட்டது. தகவல் அறிதிறனைக் கொண்ட ஒருவர் பலதரப்பட்ட தகவல் கருவிகளையும் தமது பிரச்சனைகளுக்கு தகவல் தீர்வை உருவாக்குவதற்குத் தேவைப்படும் முதனிலை வளங்களையும் பயன்படுத்துவதற்கு அவரிடம் இருக்கும் தொழிநுட்பங்களதும் திறன்களையும் விபரிப்பதற்கு இப்பதம் பயன்படுத்தப்பட்டது.  (Zurkowski 1974)
தொடர்ந்து இப்பதத்திற்கு மிகச்சிறப்பான வரைவிலக்கணத்தை வடிவமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எழுத்து அறிதிறன், கணினி அறிதிறன், நூலகத் திறன்கள், தருக்கரீதியாக சிந்திக்கும் திறன்கள் ஆகிய ஏனைய கல்விசார் இலக்குகள் தகவல் அறிதிறனுடன்  தொடர்புடையதாகவும் அதன் அபிவிருத்திக்கான முக்கிய ஆதாரமாக கருதப்படினும் தகவல் அறிதிறன் என்ற பதம் இவை அனைத்தையும் தாண்டி தனித்துவ பதமாக தகவல் சமூகம் ஒன்றில் வாழும் ஒருவரின் சமூக பொருளாதார நலனுக்கான திறவுகோலாக மாறியிருக்கிறது.

தகவல் அறிதிறனும் தேவைப்படும் திறன்களும்
தகவற் தேவையை விளங்கிக் கொள்ளும் திறன்: தகவல் தேவைப்படுகிறது என்பதை இனங்காணல், தகவல் ஏன் தேவைப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளல், என்ன வகையான தகவல் எப்போது, எந்த வடிவில், எவ்வளவு  தேவைப்படுகின்றது என்பதை இனங்காணல், காலம், வடிவம், அண்மைத்தன்மை, அணுகுகை போன்ற தகவலை அணுகுவதற்கான தடைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
தகவலின் கிடைக்கும் தன்மையை விளங்கிக் கொள்ளும் திறன் : உலகிலுள்ள தகவல் வளங்களின் வகை, அவை கிடைக்கும் இடங்கள், அவற்றைப் பெறும் வழிவகைகள், அவற்றைப் பயன்படுத்தும் காலம், தகவல் வளங்களின் தனித்தன்மை, அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் என்பன இதில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
தகவலைக் கண்டறிவதற்கான திறன்: பொருத்தமான வளங்களை தேடுவதற்கான ஆற்றல், பொருத்தமான தகவலை இனங்காணும் ஆற்றல், இனங்காணப்பட்ட தகவல் வளங்களில் மேலார்ந்த தேடல், ஆழ்ந்த தேடல், போன்ற தேடல் முறைகளைப் பயன்படுத்தித் தேடல் செய்வதற்கான ஆற்றல், சொல்லடைவாக்க சாராம்சப்படுத்தல் பருவ இதழ்களைப் பயன்படுத்தி தேடல் செய்யும் நுட்பங்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
கிடைக்கும் தகவலை மதிப்பிடவேண்டிய தேவையை விளங்கிக்கொள்ளும் திறன்: தேடல் மூலம் கிடைத்த தகவலின் அதிகாரபூர்வத் தன்மை, துல்லியத் தன்மை, அண்மைத்தன்மை, பெறுமதி, பக்கச்சார்புத் தன்மை, தகவல் தேவைக்குப் பொருந்தும் தன்மை என்பவற்றை மதிப்பீடு செய்தல் இதில் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
கிடைத்த தகவலின் நுட்பமான கையாளுகையை விளங்கிக்கொள்ளும் திறன்: கிடைத்த தகவற் பெறுபேற்றை ஆய்வு செய்தல், அவற்றை பொருத்தமான முறையில் வழங்கும் முறைகளை கண்டறிதல், ஒப்பு நோக்குதல், ஒன்றுபடுத்தல், அவற்றிலிருந்து மேலதிக தகவல்களைப் பெறும் முறைகளை கண்டறிதல் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
தகவலைப் பயன்படுத்துவது தொடர்பான ஒழுக்க நியமங்களை விளங்கிக் கொள்ளும் திறன்: பொறுப்புணர்வுடன் தகவலை பயன்படுத்த வேண்டியதன் அவசியம், அதில் பின்பற்றப்படவேண்டிய ஒழுக்க நடத்தைகள், தனிநபர் தகவல் தொடர்பில் மனிதத்துடன் அதனைப் பயன்படுத்தல், இரகசியம் பேணல், பிறருடைய செயல்களை மதித்தல், நடுநிலைதவறாமை என்பன இதில் உள்ளடங்குகின்றன.
தகவலைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் சரியான வழிகளை விளங்கிக் கொள்ளும் திறன்: கிடைத்த தகவலை இலகுவாக பயன்படுத்துவதற்கேற்ற வகையிலமைந்த பொருத்தமான வடிவம் எது? பொருத்தமான தேவையுள்ளவர் யார்?;  பொருத்தமான சூழலில் எவ்வாறு வழங்குவது? இதற்குத் தேவையான தொடர்பாடல் ஊடகங்கள் எவை? பொருத்தமான தொடர்பாடல் முறைகள் எவை? தயார்ப்படுத்தல் முறைகள் எவை?
கிடைத்த தகவல்களை எவ்வாறு முகாமை செய்வது என்பதை விளங்கிக் கொள்ளல்: கிடைத்த தகவலை எவ்வாறு சேமிப்பது? எந்தெந்த முறைகளில் நிர்வகிப்பது? எவ்வாறு பாதுகாப்பது? எவ்வாறு ஒழுங்குபடுத்துவது? எவ்வாறு மீளப்பெறுவது?

தகவல் அறிதிறனின் கூறுகள்
1. தகவல் தொழினுட்ப அறிவு: ஒரு தனிநபர் தான் கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்ற கல்வி, வேலை, தொழிற்திறன்சார் வாழ்க்கை என்பவை சார்ந்த தகவல் தொழிநுட்ப கருவிகளின் பயன்பாட்டை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல்.
2. தகவல் வள அறிவு: தகவல் வளங்களின் தோற்றம், உருவமைப்பு, வடிவமைப்பு, உள்ளடக்கம், உட்பொருள், தரம், பயன்பாடு, தகவற் தேவை, ஒழுங்கமைப்பு,  போன்றவற்றை விளங்கிக் கொள்ளவதற்கான ஆற்றல்
3. சமூகக் கட்டுமான அறிவு: தகவலின் சமூக ரீதியான நிலை அதன் உற்பத்தி என்பற்றை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல்.
4. தகவல் தொழிநுட்ப கருவிகள் சார் அறிவு: இன்றைய ஆய்வுப் பணிகளுக்கு  உதவக்கூடிய தகவல் தொழிநுட்ப கருவிகளை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றலும் பயன்படுத்துவதற்கான ஆற்றலும்.
5. வெளியீட்டு அறிவு: ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும் அவரது கருத்துக்களையும் இலத்திரனியல் வாயிலாக நூலிய அடிப்படையிலும் பல்லூடக வடிவிலும் வடிவமைக்கவும் வெளியீடு செய்வதற்குமான ஆற்றல்.
6. புதிய தொழிநுட்பங்களின் அறிவு: புதிய தொழிநுட்பங்களை விளங்கிக் கொள்ளவும், பின்பற்றவும், மதிப்பீடு செய்யவும், தகவல் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தவும், புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நுண்ணறிவுமிக்க தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தேவையான அறிவு.
7. திறனாய்வு அறிவு: தகவல் தொழிநுட்பங்களின் புலமைசார், மனித மற்றும் சமூக பலங்கள், பலவீனங்கள், வசதிகள், வரையறைகள், நன்மைகள், செலவினங்கள் போன்றவற்றை தர்க்கரீதியாக மதிப்பிடும் ஆற்றல்.

பாடசாலையும் தகவல் அறிதிறன் மாதிரிகளும்
ஸ்கொட்லாந்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றின் தகவல் அறிதிறன் சார்ந்து பொறுப்பதிகாரியாக இருக்கும் ஜேம்ஸ் ஹேரிங் (( James Herring) ) என்பவரால் விருத்தி செய்யப்பட்டு நோக்கம், அமைவிடம், பயன்பாடு, சுய மதிப்பீடு ஆகிய நான்கு அம்சங்களையும் உள்ளடக்கி PLUS (Purpose, Location, Use, Self evaluation)  என்ற முதலெழுத்துப் பெயரால் அடையாளங் காணப்படும் தகவல் அறிதிறன்களின் மாதிரி பாடசாலைகளுக்கு பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. இதில் நோக்கம் என்பது ஆய்வு அல்லது மேற்கொள்ளப்படும் பணி ஒன்றின் நோக்கத்தை இனங்காணல் என்பதாகவும், அமைவிடம் என்பது நோக்கத்துடன் தொடர்பான தகவல் வளங்களின் அமைவிடத்தை கண்டுபிடித்தல் என்பதாகவும்,  பயன்பாடு என்பது தகவல்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்தல் அல்லது நிராகரித்தல், தகவலை பெறும் பொருட்டு படித்தல், குறிப்பு எடுத்தல், அதை வெளியிடுதல் என்பதாகவும், சுயமதிப்பீடு என்பது தமக்கு ஒதுக்கப்பட்ட பணியில் தகவல் திறன்களை பிரயோகிப்பதில் தமக்கிருக்கிருக்கும் ஆற்றலை மாணவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள், அதிலிருந்து எதிர்காலத்திற்காக எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதாகவும் அமைகிறது.

1998 இல் பாடசாலை நூலகர்களுக்கான அமெரிக்க சங்கமும் கல்விசார் தொடர்கள் மற்றும் தொழிநுட்பத்துக்கான சங்கமும் இணைந்து முன்பள்ளி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையுள்ள மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் k12 பாடசாலைகளின் மாணவர்களது சுய கற்றலுக்கும் சமூகப் பொறுப்புக்குமான பின்வரும் ஒன்பது தகவல் அறிவு நியமங்களை மூன்று பிரதான தலைப்புகளின் கீழ் வெளியிட்டது.

தகவல் அறிதிறன்
1. நியமம் 1: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை வினைத்திறன்மிக்க வகையிலும் பயனுள்ள வகையிலும் அணுகுவர்.
2. நியமம் 2: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை தர்க்கரீதியாகவும் போட்டிரீதியாகவும் மதிப்பிடுவர்
3. நியமம் 3: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை சரியாகவும் உருவாக்க சக்தியுடனும் பயன்படுத்துவர்.
சுயாதீனக் கற்றல்
4. நியமம் 4: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தனிப்பட்ட ஆர்வங்களுடன் தொடர்புடைய தகவலை பெறும் திறனுடையவாராகவும் இருப்பர்

5. நியமம் 5: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் இலக்கியங்களையும் தகவலின் ஏனைய உருவாக்க வெளிப்படுத்தல்களையும் பாராட்டுவர்.

6. நியமம் 6: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தகவலைத் தேடுதலிலும் அறிவு உருவாக்கத்திலும் உச்சத்திறனை அடைய பாடுபடுவர்;.

சமூகப் பொறுப்பு

7. நியமம் 7: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் ஜனநாயக சமூகத்தில் தகவலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பவராக இருப்பர்;.
8. நியமம் 8: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தகவல் சார்ந்தும் தகவல் தொழிநுட்பம் சார்ந்த ஒழுக்கரீதியான நடத்தையை பின்பற்றுவர்;.
9. நியமம் 9: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் உள்ள மாணவர் தகவல் அறிதிறனுடையவராக இருப்பதுடன் தகவல் உருவாக்கம் சார்ந்தும் தகவல் தொழிநுட்பம் சார்ந்த ஒழுக்கரீதியான நடத்தையை பின்பற்றுவர்.

2007இல் மேற்படி அமைப்பானது இந்த நியமங்களை விரிவாக்கம் செய்ததுடன் பாடசாலை நூலகர்கள் தங்கள் கற்பித்தலுக்கு உதவக்கூடிய வகையில் மீளஒழுங்கமைத்து 21ம் நூற்றாண்டின் கற்கையாளருக்கான நியமங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த வெளியீட்டில் தகவல் அறிதிறன், தொழிநுட்ப அறிதிறன், கட்புல அறிதிறன், நூலிய அறிதிறன், எண்மிய அறிதிறன் போன்ற  அறிதிறன்களை முதன்மைப்படுத்தியது. இந்த அம்சங்கள் அனைத்தும் திறன்கள். வளங்கள், கருவிகள் ஆகியவற்றில் கற்கையாளர்களின் பயன்பாடானது

1. தேடலுக்கும் தர்க்கரீதியாகச் சிந்திப்பதற்குமான அறிவைப் பெறுதல்;
2. முடிவுகளை எடுப்பதற்கும், புதிய நிலைமைகளுக்கும் அறிவைப் பிரயோகித்தல் மற்றும் புதிய அறிவை உருவாக்குதல்
3. அறிவைப் பகிர்தல் மற்றும் ஜனநாயக சமூகத்தின் அங்கத்தவர்களாக ஆக்கபூர்வமாகவும் ஒழுக்கரீதியாகவும் பங்குபற்றல்;
4. தனிப்பட்ட மற்றும் அழகியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல் ஆகிய நான்கு பிரதான இலக்குகளாக ஓழுங்கமைக்கப்பட்டது.


Big6 திறன்கள்
உலகளாவிய ரீதியில் தகவல் மற்றும் தொழிநுட்பத் திறன்களைக் கற்பிப்பதற்கான பிரபல்யமானதும் பரந்தளவில் பயன்படுத்தப்படுவதுமான அணுகுமுறையாக மைக் ஐசன்பேர்க் என்பவரால் உருவாக்கப்பட்ட Big6 திறன்கள் கருதப்படுகின்றன. [Eisenberg 2008] ஆயிரக்கணக்கான பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், வளர்ந்தோர் பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இம்முறையானது மக்களுக்கு தகவல் தேவைப்படும் போதும் தகவலைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் தகவல் பிரச்சனைத் தீர்வு மாதிரியாக பிரயோகிக்கப்படுகிறது. தனித்துவ தேவைகளின் பொருட்டு தகவலை முறைப்படுத்தப்பட்ட வகையில் கண்டுபிடித்தல், பயன்படுத்தல், பிரயோகித்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுக்கு தகவல் தேடுகையையும் தொழிநுட்ப கருவிகளின் உதவியுடனான  திறன்களின் பயன்பாட்டையையும் இம்முறையானது ஒருங்கிணைக்கிறது.

அனைத்து வயது மட்டங்களிலும் தகவல் பிரச்சினையை தீர்ப்பதற்கான செய்முறை மாதிரியாகக் கருதப்படும் இம்முறையானது பிரச்சினை தீர்க்கும் செய்முறையில் ஆறு நிலைகளையும் ஒவ்வொரு நிலையிலும் இரு உப நிலைகளையும் கொண்டிருக்கிறது.

1. நிலை 1: பணியின் வரைவிலக்கணம்
a. தகவல் பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல்
b. தேவைப்படும் தகவலை இனங்காணல்
2. நிலை 2: தகவல் கண்டுபிடிக்கும் தந்திரோபாயங்கள்
a. கிடைக்கக்கூடிய வளங்கள் அனைத்தையும் நிர்ணயித்தல்
b. சிறந்த வளங்களை தெரிவு செய்தல்
3. நிலை 3: அமைவிடமும் அணுகுகையும்
a புத்திபூர்வமாகவும் பௌதிக ரீதியாகவும் வளங்களை கண்டுபிடித்தல்
b. ஒவ்வொரு தகவல் வளத்தின் உள்ளேயும் தேவையான தகவலைக் கண்டுபிடித்தல்
4. நிலை 4: தகவல் பயன்பாடு
a. வாசித்தல், கேட்டல், பார்த்தல், தொடுதல் ஊடாக தகவலை பெறும் செய்முறையில் ஈடுபடுதல்
b. பொருத்தமான தகவலை பிரித்தெடுத்தல்
5. நிலை 5: கூட்டிணைப்பு (ளுலவொநளளை)
a. பலதரப்பட்ட வளங்களிலிருந்தும் எடுத்த தகவலை ஒழுங்குபடுத்தல்
b. தகவலை வெளிப்படுத்தல்
6. நிலை 6: மதிப்பீடு
a. உருவாக்கத்தை மதிப்பிடுதல் (வினைத்திறன்)
b. செய்முறையை மதிப்பிடுதல் (பயன்விளைவு)


முடிவுரை
இலங்கை அரசாங்கமானது 2009ம் ஆண்டை தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலத்துக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியிருப்பதும் நீண்ட கால போரியல் வாழ்வின் அவலங்களைச் சுமந்து நலிவடைந்த ஒரு நிலையில் தமிழ்ச் சமூகத்தின் பாடசாலை உலகம் மிகக் குறுகிய காலத்தில் தகவல் தொழினுட்ப உலகமாக வலிந்து மாற்றப்பட்டமையும் தகவல் தொழினுட்பத்தைப் பற்றி பெருப்பித்துக் காட்டப்பட்டுள்ள கற்பனைகள் காரணமாக வயது வேறுபாடின்றி அது எல்லோரையும் ஆக்கிரமித்திருப்பதும் தகவல் தொழிநுட்பப் பயன்பாடு தொடர்பான மீள்பரிசீலனைக்கு இட்டுச் செல்வதன் அவசியத்தைத் தோற்றுவித்திருக்கிறது. முதல்தரப்பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் தகவல் தொழிநுட்பம் என்ற பாடம் உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்பட்டிருப்பதனால் தகவல் தொழிநுட்ப சாதனங்களைப் போதியளவு கொண்டிருக்கின்ற முதல்தர பாடசாலைகளிலும் சரி; உதவித்திட்டங்களினால் தகவல் தொழிநுட்ப உலகை பாடசாலைக்குள் வடிவமைக்க வலிந்து பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும் ஊர்ப்பாடசாலைகளிலும் சரி தகவல் தொழிநுட்பமானது மாணவர்களின்; கற்றலை இலகுவாக்குவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், கற்றல் சூழலை இலகுவாக்குவதற்கும், உலகத்தைப் பார்ப்பதற்குமான நுழைவாயிலாகவும் இருப்பதற்கேற்றவகையில் தகவல் அறிதிறன்களுக்கான இருப்பிடமாக இருப்பதைவிட  மாணவ சமூகத்தின்; முகநூல்களுக்கான  இருப்பிடமாகவும் ஆசிரிய சமூகத்தின் இயந்திரமயமான கற்பித்தலுக்கான உதவுகருவியாகவுமே இருப்பதானது நுகர்வோர் கலாசாரத்தின் இன்னொரு அம்சமாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவந்து திணிக்கப்படும் ஏனைய அம்சங்களைப் போன்றது தானோ இந்தத் தகவல் தொழிநுட்பமும் என்ற கவலையை சமூக நலனைக் கருத்தில் கொண்ட மனங்களில் தோற்றுவித்திருக்கிறது.

References
1. ஸ்ரீகாந்தலட்சுமி, அ (2010). தகவல் வளங்களும் சேவைகளும். கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
2. American Association of School Librarians (2007). Standards for the 21st Century Learner.     [http://www.ala.org/ala/mgrps/divs/aasl/guidelinesandstandards/learningstandards/AASL_LearningStandards.pdf.
3. American Association of School Librarians and the Association for Educational Communications and Technology (1998). Information Literacy Standards for Student Learning.
4. Association of College and Research Libraries (2000). Information Literacy Competency Standards for Higher Education [http://www.ala.org/ ala/mgrps/divs/acrl/ standards/ standards.pdf
5. Bruce,  Christine (1997). Seven faces of Information literacy. AUSLIB Press, Adelaide, South Australia.
6. Eisenberg, B. M. (2008). Information Literacy: Essential Skills for the Information Age. Journal of Library & Information Technology, Vol. 28, No. 2, March 2008, pp. 39-47,
7. http://athene.riv.csu.edu.au/~jherring/PLUS%20model.htm
8. The American Library Association (1989).  Final Report of the Presidential Committee on Information Literacy. ALA.



No comments:

Post a Comment