நூல்கள்----
எண்ணங்களைச் சீர்செய்து கொள்வதற்கான கருவி; சிந்தனையைச் சரிபார்த்துக் கொள்வதற்கான களம்.; வாழ்நாள் முழுவதும் கூட வரும் மறக்க முடியாத துணை. பற்றிப் பிடித்து ஏறுவதற்கு ஏற்ற கொழுகொம்பு; கீழே விழுமுன் எச்சரித்துக் காப்பாற்றும் ஊன்றுகோல். இவிழுந்துவிட்டாலோ தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நல்ஆசான். வழி தடுமாறும்போது இடித்துரைத்துத் திருத்தும் நல்ல நண்பன்.
அ. ஸ்ரீகாந்தலட்சுமி
நூல்கள்----
வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக் கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம்.
நூல்கள்----
தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்கள். துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. ஒருவருடைய வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன. –
மறைந்த பேராசிரியர் நந்தி
ஒவ்வொரு புத்தகமும் எம்முன்னே மக்களைப் பற்றியும், அவர்கள் ஆசாபாசங்கள் பற்றியும், அவர்கள் இதயம் பற்றியும், கருத்தோட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளத் திறந்து விடப்படும் சாளரங்கள்'
-மக்சிம்கோர்க்கி -
நூல் அழகுகள் - பத்து சுருங்கச் சொல்லல்
விளங்கவைத்தல்
படிப்போர்க்கினிமை
நல்ல சொற்களை அமைத்தல்
இனிய ஓசையுடைமை
ஆழமுடைத்தாதல்
பொருள்களை முறையுடன் அமைத்தல்
உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை
சிறந்த பொருளுடைத்தாதல்
விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல்
(தொல்காப்பியம்- பொருள்: 665)
நூற் குற்றங்கள்- பத்து
கூறியது கூறல்
மாறுபட்டுக் கூறல்
குறைபடக் கூறல்
மிகைப்படக் கூறல்
பொருளில்லாமல் கூறல்
மயங்கக் கூறல்
இனிமையில்லாதன கூறல்
இழி சொற்களால் புனைந்து கூறல்
ஆதாரமின்றித் தானே ஒரு பொருளைப் படைத்தும் கூறல்
எவ்வாறாயினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு கூறல் (தொல்காப்பியம்- பொருள்: 663)
உங்களுடன் ஒரு நிமிடம்
பிரம்போ தடியோ இல்லாமல்,வெறுப்போ கோபமோ கொள்ளாமல்,உணவையோ பணத்தையோ எதிர்பாராமல்,உங்களுக்கு அறிவூட்டும் நல்ஆசான் நான்.உறக்கம் என்பது எனக்குக் கிடையாது.உங்களுக்கு வேண்டியவற்றை நான் ஒளிப்பதில்லை.தவறிழைக்கும் உங்களை நான் கண்டிப்பதில்லை.உங்கள் அறியாமையைப் பார்த்து எள்ளி நகையாடுவதுமில்லை.நான் உங்களை மதிக்கிறேன் அதுபோல் நீங்களும் எனக்கு மதிப்பைத் தாருங்களேன்.
No comments:
Post a Comment